<p>ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு விதமான மலர்கள் பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. </p><p>இந்த நிலையில் தற்போது சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் மழை, வெயில் என பருவநிலை மாற்றம் காரணமாக மல்லிகை பூ உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.1000க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று பல மடங்கு விலை உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2100 ரூபாய்க்கு விற்பனையானது. </p><p>இதனால் மல்லிகை பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் முல்லை கிலோ ரூ.320-க்கும், காக்கட்டான் பூ ரூ.325-க்கும், செண்டுமல்லி ரூ.20-க்கும், கோழிக்கொண்டை ரூ.50 -க்கும், சம்பங்கி கிலோ ரூ.30-க்கும் விற்பனையானது. வரத்து குறைந்து மல்லிகைப்பூ விலை உயர்ந்த நிலையிலும், வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை ஏலம் எடுத்தனர். </p>