<p>மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ளது நரசிங்கம். இந்த ஊரின் அம்மச்சி அம்மன் நகரில் அருள்தாஸ், வினோத், பாஸ்கர் மற்றும் முத்து ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டு வாசல் முன்பு தங்களுக்கு சொந்தமான கார்களை நிறுத்துவது வழக்கம். வழக்கம் போல் நேற்றும் கார்களை நிறுத்தி விட்டு, இரவு அவரவர் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். </p><p>அப்போது நள்ளிரவில் அங்கு வந்த குடிபோதை ஆசாமிகள் மூன்று பேர், வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களை கல்லால் அடித்து உடைத்தனர். ஓட்டுநர் இருக்கையின் அருகே உள்ள கண்ணாடியை உடைக்க முற்பட்ட போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு வந்துள்ளனர்.</p><p>இதனையடுத்து தங்களது இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். தங்கள் வீட்டு வாசல் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த கார்கள் அடித்து நொறுக்கப்பட்டது அறிந்த காரின் உரிமையாளர்கள் சம்பவம் குறித்து ஒத்தக்கடை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். </p><p>தீவிர விசாரணை நடத்தி, நரசிங்கம்பகுதியைச் சேர்ந்த ராஜ சஞ்சய் (19), முத்துப்பாண்டி (18), மங்களகுடி பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாண்டியன் (19) ஆகியோரை ஒத்தக்கடை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>