<p>தென்காசி: தென்காசி பூவன்குறிச்சி பகுதியில் நெல்லை மாவட்டம் வி.கே புரத்தைச் சேர்ந்த செய்யது அலி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை இந்த பிளாஸ்டிக் கம்பெனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.</p><p>கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியதை பார்த்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின், சம்பவ இடத்துக்கு வந்த அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால், கம்பெனியில் இருந்த பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்தும் தீ பற்றி எரிய தொடங்கியதால் கூடுதலாக சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டனர்.</p><p>இதையடுத்து, சுமார் இரண்டு மணி நேர போராட்டதிற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகி நாசமானதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆழ்வார்குறிச்சி போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு யாரேனும் உள்நோக்கத்துடன் சதி செய்து தீப்பற்ற வைத்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. </p>