<p>திருநெல்வேலி: பாபநாசம் மலை அடிவாரத்தில் உள்ள இலுப்படியார் சுடலை ஈஸ்வரர் கோயில் வளாகத்திற்குள், ஒரே நேரத்தில் 3 கரடிகள் உலா வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p>நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி, மலை அடிவார கிராமமான அனவன்குடியிருப்பு, கோட்டைவிளைபட்டி, பசுக்கிடைவிளை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றித் திருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.</p><p>இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், பசுக்கிடைவிளை வடக்கு பகுதியில் உள்ள இலுப்படியார் சுடலை ஈஸ்வரர் கோயிலுக்குள் நேற்று இரவு மூன்று கரடி உலா வந்துள்ளது. இவை, அங்கிருந்த பிளாஸ்டிக் பைப் மற்றும் தகர டப்பாக்களை சேதப்படுத்தின. இதனை, அப்பகுதியில் இருந்தவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. </p><p>ஒரே நேரத்தில் 3 கரடிகள் கோயிலுக்குள் உலா வந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுதொடர்பாக வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>