<p>தஞ்சாவூர்: மாதம்தோறும் வரும் அமாவாசையன்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி, இன்று (செப்.21) புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை முன்னிட்டு தஞ்சை, திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, இறந்த முன்னோர்களுக்குத் தேங்காய், வாழைப்பழம், கருப்பு எள், புஷ்பம், கீரை வகைகள், பச்சரிசி, பழங்கள், காய்கறிகள் ஆகியவை கொண்டு சிறப்புப் பூஜைகள் செய்தனர்.</p><p>பின் அதனை காவிரி ஆற்றில் கொண்டு சென்று மறைந்த முன்னோர்கள் பெயர்களை உச்சரித்தவாறு தர்ப்பணம் செய்தனர். அதைத் தொடர்ந்து தர்ப்பணம் செய்த பொருட்களை காவிரி ஆற்றில் கரைத்து வழிபட்டனர். இந்த நாளன்று ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். </p><p>தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமானவர்கள் வந்து, காவிரி கரையில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துச் சென்றனர். இதனை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக திருவையாறு காவிரி கரையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p>