<p>தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சாலையில் திடீரென வலம் வந்த பச்சோந்திகளை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். </p><p>தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தினமும் இரவில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவுகிறது. </p><p>இந்த நிலையில் கொளகம்பட்டி வனப் பகுதியில் அரூர் செல்லும் சாலையில், இடத்திற்கேற்ப தனது நிறத்தை மாற்றும் தன்மையுடைய, இரண்டு பச்சோந்திகள், ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் கிராபிக்ஸ் வடிவமைப்பு போல், பொதுமக்களை கவரும் வகையில் மெதுவாக சாலையில் வலம் வந்தன. </p><p>இதனை அந்த பகுதியில் பயணித்த இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அனைவரும் நின்று கண்டு ரசித்தனர். அதே போல், சாலையில் பச்சோந்தி ஊர்ந்து செல்லும் காட்சியை பார்த்து வாகன ஓட்டிகள், அவற்றிற்கு இடையூறு செய்யாமல் ஒதுங்கிச் சென்றனர். அரிய வகையில் தென்படும் பல்லி வகை என்பதால், பச்சோந்திகள் சாலையை கடக்கும் வரை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.</p>