<p>தேனி: வைகை அணை கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 10 நாட்களாக தண்ணீர் வீணாகி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கூட்டுக் குடிநீர் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.</p><p>இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சி பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இந்த குழாய் உடைப்பால் சாலை சேதமடைவதோடு, அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.</p><p>ஆகவே குடிநீர் வாரிய அதிகாரிகள் இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனை குறித்து வைகை அணை கூட்டுக் குடிநீர் வடிகால் உதவி செயற்பொறியாளர் செல்வியை தொடர்பு கொண்டு கேட்ட போது, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.</p>