<p>நீலகிரி: குன்னூர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அரிய வகை ஆசிய மரநாய் வனத்துறையினரால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.</p><p>நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள உதகை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி போன்ற வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை, மான்கள், மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் புகுவது வழக்கமாக உள்ளது.</p><p>அந்த வகையில், குன்னூர் குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாயில் ஆசிய மரநாய் ஒன்று சிக்கித் தவிப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று அதனை பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து, வனவிலங்கு மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து, மரநாயை அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.</p><p>அரிய வகை உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மரநாய்கள், வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த உயிரினங்களை அழிப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>