<p>அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் ரூ.31.84 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவங்கி வைப்பதற்காக சிதிலவாடி கிராமத்திலிருந்து உஞ்சினி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வடக்குப்பட்டி கள்ளுக்குட்டை தெருவைச் சேர்ந்த 6-ம் வகுப்பு பயிலும் மாணவி அர்ச்சனா தனது பெற்றோருடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்ற காரை சாலையில் கைகாட்டி நிறுத்தினார். </p><p>அதனை கண்ட அமைச்சர் சிவசங்கர், உடனடியாக காரில் இருந்து இறங்கி சிறுமியிடம் என்னவென்று கேட்டார். அப்போது சிறுமி, “எங்களது தெருவில் 50 வீடுகள் உள்ளன. சாலை மட்டத்திலிருந்து எங்கள் தெரு தாழ்வாக உள்ளதால் மழை காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறுகிறது. அதனால், அப்பகுதி உள்ள என்னைப் போன்ற மாணவ, மாணவிகளால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல சிரமப்பட வேண்டியதாக உள்ளது. எனவே எங்கள் தெருவில் புதிய சாலை அமைத்து தந்தால் பயனுள்ளதாக இருக்கும்” என கூறினார். </p><p>இதை கேட்ட அமைச்சர் சிவசங்கர் உடனடியாக அந்த தெருவை பார்வையிட்டு, அந்தப் பகுதியில் புதிய சாலை அமைக்க உத்தரவிட்டார். மேலும், தனது காரை தைரியமாக கை காட்டி நிறுத்தி தங்களது பகுதியில் சாலை அமைக்க கோரிக்கை வைத்த சிறுமி அர்ச்சனாவுக்கு கைக்குலுக்கி பாராட்டினார்.</p>