<p>தேனி: தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘இட்லி கடை’. இந்த திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. </p><p>இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் உடன் இணைந்து, தனுஷின் வொண்டர்பார் நிறுவனமும் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இத் திரைப்படத்தில், அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன், தெலுங்கு நடிகையான ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.</p><p>இந்நிலையில் நடிகர் தனுஷ் திரைப்படம் வெற்றி பெற வேண்டி தனது தாய், தந்தை கஸ்தூரி ராஜா, மகன்கள் லிங்கா, யாத்ரா மற்றும் குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் கருப்பசாமி கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.</p><p>கோயிலுக்குள் பூஜை செய்யப்பட்டு அர்ச்சனை காட்டப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் கோயில் கருவறைக்கு வெளியே அமர்ந்து கண்களை மூடி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார். சுமார் பத்து நிமிடங்கள் அவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் மேற்கொண்ட நிலையில் அங்கிருந்து காரில் தனது மகன்களுடன் நடிகர் தனுஷ் புறப்பட்டு சென்றார்.</p>