<p>வேலூர்: வேலூர் மாநகர் டிடர் லைன் பகுதியில் சக்தி ஸ்தலமான ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. </p><p>இந்த கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் நவராத்திரி விழா கடந்த செப்.22ஆம் தேதி தொடங்கிய நிலையில் 5ஆம் நாளான நேற்று அம்மனுக்கு சன்னிதான அலங்காரம் என்ற பெயரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 500, 200, 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்களால் தோரணங்கள் உள்ளிட்ட அலங்காரம் செய்யப்பட்டது. </p><p>தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். பூஜைக்குப் பின், அம்மன் மடியில் வைக்கப்பட்ட 50 ரூபாய் நோட்டுக்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. </p><p>அதே போல், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஸ்ரீ செல்லியம்மன் கோயிலிலும் 5ஆம் நாளான நேற்று அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனைகள் காட்டப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி! ஓம் சக்தி! என கோஷங்கள் எழுப்பியவாறு அம்மனை சிறப்பு தரிசனம் செய்தனர். </p>
