<p>தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து முதல் நாளில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரமும், இரண்டாவது நாள் மீனாட்சி அலங்காரமும் நடைபெற்ற நிலையில் மூன்றாம் நாள் அம்மனுக்கு சதஸ் (மகாராணி) அலங்காரம் செய்யப்பட்டது. </p><p>இந்நிலையில் நான்காவது நாளான இன்று அம்மனுக்கு காயத்ரி அலங்காரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வின்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.</p><p>இதையடுத்து, நந்தி மண்டபம் முன்பு பரதநாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்ற இந்த பரதநாட்டிய கலை நிகழ்ச்சியானது நவராத்திரி விழா சிறப்பாக மாலை 6 மணிக்கு மேல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று கலைஞர்கள் பரதநாட்டியம் ஆட தொடங்கியதும் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இருப்பினும் அவற்றை பொருட்படுத்தாமல் நாட்டிய கலைஞர்கள் மேடையில் நாட்டியம் ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. </p><p>பரதநாட்டிய நிகழ்ச்சியைமண்டபத்தின் உள்பக்கத்தில் நின்றும், அமர்ந்தும் பக்தர்கள் கண்டு ரசித்தனர். மேலும் மழையிலும் நாட்டியமாடிய கலைஞர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி பாராட்டை பெற்று வருகிறது.</p>