<p>திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, கரடி, சிறுத்தை, மான், மிளா உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக கரடிகள் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார மலை அடிவார கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் சுற்றி திரிந்து வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள முண்டந்துறை வனச்சர அலுவலகத்தில் இருந்து காரையாறு செல்லக்கூடிய மலைவழி சாலையில் ஒற்றைக் கரடி நீண்ட நேரமாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளது. இதனை அவ்வழியாக பேருந்து மற்றும் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஒருவர் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட நிலையில் அந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. </p><p>இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் மலை அடிவார கிராம மக்கள், “வனத்துறையினர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த வழியாக செல்ல கூடியவர்களை கரடி தாக்கும் அபாயம் உள்ளது. மக்கள் பெரும் அச்சத்துடன் இந்த சாலையை கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கரடியை பிடித்து கூண்டில் அடைத்து அடர் காட்டு பகுதிக்குள் விடும் முயற்சியில் வனத்துறையினர் இறங்க வேண்டும்” என கோரிக்கை வைத்து வருகின்றனர். </p>