<p>திருநெல்வேலி: காவல்கிணறு அருகே கட்டுப்பட்டை இழந்த கார் சாலையின் சென்ட்ரல் மீடியனில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சமுத்திரபாண்டி குமார் மற்றும் மைக்கேல் சுரேஷ். இவர்கள் இருவரும் தங்களது காரில் நேற்று நாகர்கோவில் சென்றனர். இதில், கார் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், நெல்லை மாவட்ட எல்லையான காவல் கிணறு அருகே புண்ணியவாளன்புரம் பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்ட்ரல் மீடியனில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p>இந்த விபத்தில், கார் எஞ்சின் தனியாக கழன்று ஓடியது. இதில், காருக்குள் இருந்த இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பணகுடி காவல்துறையினர், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>