<p>சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு தவெக தலைவர் விஜயின் பிரச்சார வாகனத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளது.</p><p>சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சனிக்கிழமை (செப்.27) கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதனால், விஜயின் தேர்தல் பரப்புரை கூட்டம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், விஜயின் பரப்புரை பேருந்துக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு மாலை அணிவித்து, வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டது. அதேபோல, தவெகவினர் பரப்புரைக்கு பயன்படுத்தும் வேனிலும் மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>