<p>திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயில் கிரிவலத்திற்கு வந்த பக்தரை, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். குறிப்பாக, பௌர்ணமி நாட்களில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்களும் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் கிரிவலம் மேற்கொள்வார்கள்.</p><p>கிரிவலத்தின் போது பக்தர்களிடம் சில அடையாளம் தெரியாத நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும், பக்தர்களை மிரட்டி தாக்குவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், நேற்று (அக்.2) இரவு கிரிவலம் முடித்து விட்டு வந்த பக்தர் ஒருவரிடம், ரவுண்டானா அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.</p><p>தொடர்ந்து, பேச்சை முடித்து விட்டு சென்ற அந்த பக்தரை விடாமல் துரத்திச் சென்று தாக்கியுள்ளார். அதில், கிரிவலம் வந்த பக்தர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த பக்தரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, பக்தரை அடையாளம் தெரியாத ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p>