<p>தஞ்சாவூர்: குல தெய்வத்தின் மீது ஆணையாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட மாட்டோம் என ஆட்டோ ஓட்டுநர்கள் உறுதிமொழி எடுத்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.</p><p>தஞ்சையில் போக்குவரத்து காவல் துறை சார்பில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திலகர் திடல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, மது அருந்தி விட்டு ஆட்டோ ஓட்டக் கூடாது என தஞ்சை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் அறிவுரை வழங்கினார்.</p><p>ஓட்டுநர்களிடம் பேசிய காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், “ஆட்டோ ஓட்டுநர்களான நீங்கள் ஸ்டைலாக இருக்கனும். உங்களை முதலில் உங்களுக்கு பிடிக்கனும், பிறகு தான் மற்றவர்களுக்கும் பிடிக்கும். தூக்கக் கலக்கத்திலும், போதை தெளியாமலும் இருக்கக் கூடாது. அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் முதலாளியான பயணிகளுக்கு உண்மையாக இருங்கள். நாம் உண்மையாக இருந்தால் கடவுள் நமக்கு துணையாக இருப்பார். ஒரு டிராபிக் இன்ஸ்பெக்டர் (Traffic Inspector) நினைச்சா எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால், நாங்கள் ஐந்து பைசா கூட மற்றவர்களிடம் வாங்குவதில்லை” என அறிவுரை வழங்கினார்.</p><p>இதனையடுத்து, “மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எதுவாக இருந்தாலும், பணியில் இருக்கும் போது சத்தியமாக, குலதெய்வத்தின் மீது ஆணையாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட மாட்டோம்” என ஓட்டுநர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.</p>
