தேனி: கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மேகமலை அருவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளதோடு, தொடர்ச்சியாக அருவிக்கு செல்லக் கூடிய பகுதியில் சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேகமலை அருவி அமைந்துள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை விடிய விடிய பெய்த தொடர் கனமழை காரணமாக மேகமலை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அருவியில் செந்நிறத்தில் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு தண்ணீர் ஓடுவதோடு, அருவிக்கு செல்லக் கூடிய படிக்கட்டுகள் வழியாக தண்ணீர் வழிந்தோடுகிறது.

இந்த கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, மேகமலை வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதித்துள்ளதோடு, அருவிக்கு முன்பாக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சோதனைச் சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து நீர்வரத்து சீராகும் வரை இந்த தடை தொடரும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.