<p>திருநெல்வேலி: விக்கிரமசிங்கபுரம் முத்துமாரி அம்மன் கோயிலுக்குள் புகுந்த 3 கரடிகள், அங்கிருந்த எண்ணெய்யை குடித்து அட்டகாசம் செய்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p>நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களான அனவன்குடியிருப்பு, பசுக்கிடைவிளை, பொதிகையடி, மேட்டு தங்கம்மன் கோயில் தெரு உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சமடைந்து, கரடிகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், விக்கிரமசிங்கபுரம் மேட்டு தங்கம்மன் கோயில் தெருவில், ரேசன் கடை அருகே உள்ள முத்துமாரி அம்மன் கோயிலில் மூன்று கரடிகள் புகுந்து, கோயிலில் வைத்திருந்த எண்ணெயை குடித்து விட்டு அங்கிருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. தற்போது இந்த காட்சிகள் மூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. </p><p>கரடிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் வனத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>