தேனி: 'இட்லி கடை' திரைப்படம் வெற்றி பெறுவதற்காக நடிகர் தனுஷ் குடும்பத்துடன் அவரது குலதெய்வம் கோயிலுக்கு மீண்டும் இன்று சென்று சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை' திரைப்படம் கடந்த 1-ந் தேதி வெளியானது. இத் திரைப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரங்காபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வமான கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த நடிகர் தனுஷ் குலதெய்வத்தை வழிபட்டு சென்றனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் குலதெய்வம் கோயிலுக்கு நடிகர் தனுஷ் தனது பெற்றோர் கஸ்தூரி ராஜா - விஜயலெட்சுமி, சகோதரர் செல்வராகவன், அவரது மனைவி கீதாஞ்சலி மற்றும் தனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் வந்தார். அங்கு கோயிலில் அவர்கள் தரிசனம் செய்தனர்.

அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் மற்றும் உறவினர்கள் தனுஷை ஆர்வத்துடன் வரவேற்றனர். ஆனால் நடிகர் தனுஷை அவர்கள் நெருங்கி விடாமல் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி விட்டனர். தனுஷை பார்க்க வேண்டும், அவருடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என காலையிலிருந்து ஆவலுடன் காத்திருந்த அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.