<p>செங்கல்பட்டு: மரத்தின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்திற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பை, மெக்கானிக் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக போராடி மீட்டுச் சென்றனர்.</p><p>செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு அருகே மரத்தின் நிழலில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரது இரு சக்கர வாகனத்தின் அடி பகுதியில் புகுந்து கொண்டு தலையை வெளியே நீட்டி பயமுறுத்திக் கொண்டு இருந்தது.</p><p>இதனைப் பார்த்த முத்து அலறி அடித்து, மாமல்லபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அருகில் இருந்த மெக்கானிக் உதவியுன் இரு சக்கர வாகனத்தின் உதிரி பாகங்களை பிரித்து எடுத்து அதனுள் நெளிந்து கொண்டிருந்த கட்டுவிரியன் பாம்பை மீட்டு, ஒரு பாட்டிலில் அடைத்து எச்சூர் காட்டு பகுதிக்கு எடுத்து சென்று விட்டனர். துரிதமாக செயல்பட்டு பாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.</p>