<p>திருவண்ணாமலை: விடிய விடிய பெய்த கனமழை காரணமாக, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p>பருவ மழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியிலும், ஜவ்வாது மலை அடிவாரப் பகுதியிலும் நேற்று (அக்டோபர் 3) இரவு முதல் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஜவ்வாது மலையில் வெள்ளம் ஏற்பட்டது.</p><p>திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், செய்யாற்றின் குறுக்கே செ.நாச்சிப்பட்டில் கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பி, செய்யாற்றில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. மேலும், செய்யாற்றில் செல்லும் மழைநீர் செங்கம் பகுதி மற்றும் புதுப்பாளையம், காஞ்சி, கலசப்பாக்கம் பகுதிகளில் உள்ள ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகிறது.</p><p>ஏரிகள் நிரம்பி வழிவதால், அப்பகுதியில் சம்பா பட்டம் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.</p>