திண்டுக்கல்: தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பண்டிகைக் கால விடுமுறையும், வார இறுதியும் ஒன்றிணைந்ததால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலைமோதியது.

காலை வேளைகளில் தூம்பாறை, குணா குகை, பைன் மரக்காடு, மோயர் சதுக்கம், ரோஜா தோட்டம், பெப்பர் அருவி ஆகிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவது வழக்கம். மாலை நேரங்களில், நகர மையத்தில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்கா மற்றும் ஏரிச் சாலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூடுவது வாடிக்கையாக உள்ளது.

கடந்த மூன்று நாட்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்ததால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று வார இறுதியையொட்டி பிரையண்ட் பூங்காவில் வண்ணமயமான மலர்களைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். மேலும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி, சைக்கிள் சவாரி, குதிரை சவாரி மூலம் உற்சாகமாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.