<p>திண்டுக்கல்: கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் திடீரென இரண்டு காட்டெருமைகள் உலா வந்ததால், பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். தற்போது இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p>திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டெருமைகள், நகர்ப்பகுதிகளில் உலா வருவதும், குடியிருப்பு பகுதிகளில் முகாமிடுவதும் வாடிக்கையாக உள்ளது. இவை அவ்வப்போது மனிதர்களையும் தாக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.</p><p>இந்த நிலையில், நேற்றிரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டெருமைகள், திடீரென சாலையில் உலா வந்ததால், சாலையில் நடந்துச்சென்ற பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்தனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த சுற்றுலா பயணியை முட்டச் சென்றது. இந்த சமயத்தில், அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டதால், அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.</p><p>தொடர்ந்து, இரண்டு காட்டெருமைகளும் பேருந்து நிலையத்திற்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில், பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பதறியடித்து ஓடினர். தற்போது இந்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.</p>