நீலகிரி: குன்னூர் அருகே உலிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் சிறுத்தை ஒன்று ஹாயாக சாலையில் உலா வந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப் பகுதியை கொண்ட மாவட்டமாகும். இங்கு, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது, இங்குள்ள காடுகள் அழிக்கப்பட்டு விடுதிகள் மற்றும் காட்டேஜ்கள் கட்டப்பட்டு வருவதால், வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் சூழல் உள்ளது.

இவ்வாறு குடியிருப்பு பகுதிக்குள் வரும் வன விலங்குகள் மனிதர்கள் மற்றும் செல்லப் பிராணிகளை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால், அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். குறிப்பாக, குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு குன்னூர் அருகே உலிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் சிறுத்தை ஒன்று சாலையில் நடந்துச் சென்றது. இதனை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.