கோயம்புத்தூர்: வால்பாறையில் உள்ள இஞ்சி பாறை எஸ்டேட்டில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த இளைஞரை கரடி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இஞ்சி பாறை எஸ்டேட் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் காளீஸ்வரன் (வயது 29) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் சிறுகுன்றம் எஸ்டேட்டில் உள்ள ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார்.

தினமும் வேலைக்கு பேருந்தில் சென்றுவரும் காளீஸ்வரன், நேற்றும் வழக்கம்போல் பேருந்தில் சென்றுவிட்டு, பணி முடிந்து இரவு 8½ மணி அளவில் பேருந்தை விட்டு இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இவர் செல்லும்போது தேயிலை காட்டிற்குள் பதுங்கியிருந்த கரடி ஒன்று அவரை துரத்தி வலதுபுற தலையில் கடுமையாக தாக்கியுள்ளது.
இதையும் படிங்க: 3 நாளில் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி... தெரு நாய்கடியால் அச்சத்தில் பொதுமக்கள்!
இதில் படுகாயமடைந்த காளீஸ்வரன் கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கரடியிடம் போராடி அவரை மீட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் காளீஸ்வரனை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் சிகிச்சைக்கான முன்பணமாக பத்தாயிரம் ரூபாயை வனத்துறை ஊழியர் முத்துமாணிக்கம் அவரிடம் வழங்கி, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மக்கள் வசிக்கிற பகுதியில் கரடி வந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இஞ்சி பாறை பகுதியில் ஏராளமான கரடிகள் சுற்றித் திரிவதால் அங்குள்ளவர்கள் அச்சத்தில் உள்ளதாகவும், எனவே அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும், சமூக ஆர்வலர்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.