<p>வேலூர்: சுடுகாட்டிற்கு செல்லும் பாதை வெள்ளத்தில் மூழ்கியதால், இறந்தவரின் உடலை ஆற்றின் நடுவே கயிறு கட்டி ஆபத்தான முறையில் கிராம மக்கள் எடுத்துச் சென்றனர். </p><p>வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட கனமழையால், கொட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் பாதை முற்றிலுமாக மூழ்கியது. இந்த நிலையில், அந்த பகுதியில் ஒருவர் இன்று உயிரிழந்தார். வெள்ளத்தால் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை மூழ்கியதால், சடலத்தை எடுத்துச் செல்ல முடியாமல் மக்கள் செய்வதறியாமல் திகைத்தனர். </p><p>இதனையடுத்து தீயணைப்பு துறையினரின் உதவியுடன், கொட்டாற்றில் இரு புறங்களிலும் கயிறு கட்டி, ஆபத்தான முறையில் சடலத்தை எடுத்துச் சென்றனர். இது மாதிரியான நிலை ஒவ்வொரு மழை காலத்திலும் வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். </p><p>இதனிடையே, சுடுகாட்டிற்கு செல்லும் பாதைக்கு மாற்று வழி அமைக்குமாறு, எருக்கம்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.</p>
