<p>கோயம்புத்தூர்: அதிரப்பள்ளி வனப்பகுதியில் மானை புலி ஒன்று வேட்டையாடி இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ளது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். குறிப்பாக வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிரப்பள்ளியையும் சுற்றி பார்த்து செல்வது வழக்கமாகியுள்ளது.</p><p>இந்நிலையில் வால்பாறை பகுதியில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலை முழுவதும் வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால் இங்கு யானை, சிறுத்தை, புலி என வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுக்கிறது. </p><p>இந்நிலையில் தற்போது வால்பாறை பகுதியில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் வழியில் புலி ஒன்று மானை வேட்டையாடி சாலையில் இழுத்து சென்றுள்ளது. அப்போது அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் இதை தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நிலையில் தற்போது இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது. மேலும், தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படும் நிலையில் பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். </p>
