<p>தேனி: கிராம சபை கூட்டத்தில் திமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக, தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,480 ஊராட்சிகளில் இன்று (அக்.11) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சியிலும் மண்டல வட்டார வளர்ச்சித் துணை அலுவலர் முனிராஜ் மற்றும் ஊராட்சி மன்ற ஊரக வளர்ச்சி வட்டார செயலாளர் ஜெயபாண்டி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.</p><p>துறை ரீதியான அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாத நிலையிலும், இக்கூட்டம் தொடங்கியதாக கூறப்படுகிறது. அப்போது பேசிய பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் முறையாக செயல்படவில்லை, குடிநீர், மழைநீர் கால்வாய் பிரச்சனை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தொடர்ந்து, பாஜக சார்பில் பங்கேற்ற மாவட்ட செயலாளர் ராஜபாண்டியனும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.</p><p>அதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையை பேசவிடாமல் தடுத்து தாக்க முயன்றதாக திமுகவினர் மீது குற்றச்சாட்டிய பாஜக நிர்வாகிகள், மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி அங்கிருந்த அனைவரையும் அப்புறப்படுத்தினர். இதனால், எண்டப்புளி ஊராட்சி கிராம சபை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.</p>
