<p>தஞ்சாவூர்: புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.</p><p>தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் உள்ள சீனிவாச பெருமாள் திருக்கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், கல் கருட ஸ்தலமாக போற்றப்படுகிறது. இக்கோயில் திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் பாடி மங்களா சாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாகவும் திகழ்கிறது. இதனால், ஒவ்வொரு சனி மற்றும் வியாழக்கிழமையில் இங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.</p><p>அந்த வகையில், இன்று பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் சீனிவாசப் பெருமாள் மற்றும் வஞ்சுளவல்லி அம்மனுக்கு சிறப்புப் பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. குறிப்பாக, 2,500 தாமரை மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.</p><p>அதேபோல, கல் கருட பகவானுக்கும் தாமரை, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பல்வேறு மலர்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால், நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று, “கோவிந்தா.. கோவிந்தா..” கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, பெருமாளை தரிசிக்க வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.</p>