<p>திருநெல்வேலி: ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை ராதாபுரம் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். </p><p>நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன்(26). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் (அக்14) எதிர்பாராத விதமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்திருக்கும் 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். கிணற்றுக்குள் இருந்த கம்பி ஒன்றை பிடித்துக்கொண்டு நின்ற அவர், சுமார் 30 மணி நேரமாக வெளியே வர முடியாமல் போராடியுள்ளார்.</p><p>நேற்று எதேச்சையாக அந்த வழியாகச் சென்ற ஒருவர், கிணற்றுக்குள் சத்தம் வருவதைக் கேட்டு உள்ளே எட்டிப் பார்த்துள்ளார். அப்பொழுது ஐயப்பன் கிணற்றுக்குள் கம்பி ஒன்றைப் பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. விரைந்து செயல்பட்ட அவர், இதுகுறித்து ராதாபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் உடனடியாக அந்த இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிற்றுக் கூடையை கிணற்றுக்குள் இறக்கி, ஐயப்பனை பத்திரமாக மீட்டனர். </p><p>பின்னர், அவரை சிகிச்சைக்காக மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 60 அடி ஆழமுள்ள கிணற்றில் சுமார் 30 மணி நேரம் தவித்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்க உதவிய அந்த நபருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.</p>