தேனி: மன நல நோயாளிகள் புத்துணர்ச்சி பெறும் வகையில் அரசு மனநல மருத்துவமனை வளாகத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

தேனியை அடுத்த சமதர்மபுரத்தில் பழைய அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பின் ஆண்டிபட்டி செல்லும் வழியில், கானாவிலக்கு பகுதியில் புதியதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் வருகை குறைந்து, தேனி பழைய அரசு மருத்துவமனை நீண்ட ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது.

இதனையடுத்து மருத்துவமனையாக செயல்பட்டு வந்த கட்டிடத்தை அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் புத்துணர்ச்சி மறுவாழ்வு மையமாக மாற்றப்பட்டு, தற்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அந்த மையத்தில் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மனநல சிகிச்சைக்கு வருவோருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், மருத்துவமனையில் கட்டடங்கள் மற்றும் சுவர்களில் புதிய ஓவியங்கள் தீட்ட திட்டமிட்டு அந்த பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. அப்பணிகள் தற்போது முடிவடைந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் ஓவியங்கள் வரையப்பட்டு பூங்காவாக காட்சியளிக்கிறது.

மனநல மருத்துவமனை என்ற தோற்றத்தை இந்த ஓவியங்கள் முற்றிலும் மாற்றி உள்ளதாகவும், ஒவ்வொரு ஓவியங்களும் சற்று வித்தியாசமாகவும், கூர்ந்து கவனிக்கும் படியும் இருப்பதால் இது சிகிச்சையில் இருப்பவர்களை குணப்படுத்துவதில் ஒரு பங்கு வகிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.