<p>தென்காசி: குற்றாலம் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, மூன்றாவது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில், தென்காசி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.</p><p>இதனால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலையிலிருந்து அதிகப்படியான கனமழை பெய்து வருவதால், குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று மூன்றாவது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் 24 மணி நேரமும் தற்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p>
