<p>திண்டுக்கல்: கொடைக்கானல் சிட்டிவியூ பகுதியில் கடல் அலையை போல் சூழ்ந்த வெண்பனி மூட்டத்தை சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழந்தனர்.</p><p>கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடர்ந்த பனி மூட்டத்துக்கு நடுவே மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், மலைப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், கொடைக்கானலின் செண்பகனூர் பகுதியில் அமைந்துள்ள சிட்டிவியூ பள்ளத்தாக்கு பகுதியில், காலை நேரத்தில் எதிரே தென்படும் பசுமையான மலை முகடுகளில் கடல் அலையைப் போல பரவிய வெண்பனி மூட்டங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.</p><p>இந்தப் பகுதியில், பசுமை மிகுந்த மலை முகடுகளுக்கு இடையே வெண்பஞ்சு மேகமூட்டங்கள் ஆங்காங்கே படர்ந்து, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அழகாக காட்சியளிக்கின்றது. இதனை காண்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகள், இந்தக் காட்சியைக் கண்டு ரசிப்பதுடன், செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.</p><p>காலை நேரத்தில் மலைப்பகுதிகளை முழுவதும் மறைக்கும் இந்த பனிமூட்டம், கடல் அலையை போன்று அமைதியாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது. இயற்கையின் இந்த அற்புதக் காட்சியை ரசிக்க, ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் சிட்டிவியூ பகுதிக்கு வருகை தருகின்றனர். </p>
