<p>தேனி: இடுக்கியில் பெய்த கனமழையால் வண்டிப் பெரியாறு அருகே குடியிருப்பு பகுதியில் நீர் புகுந்து சேறும் சகதியுமான நிலையில், அதனை தீயணைப்பு வீரர்கள் சுத்தம் செய்தனர்.</p><p>தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி பகுதிகளை ஒட்டியுள்ள தமிழக - கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் வண்டிப்பெரியாறு அருகே நெல்லிமலை, கக்கி சந்திப்பு ஜவகர் நகர், பிரியதர்ஷினி நகர் வழியே செல்லும் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.</p><p>இதில், கால்வாய் கரையோரம் இருந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுந்தது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். ஆனால், உடமைகள் மழை நீரால் சேதமடைந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தற்போது மழை நீர் வடிந்ததும், பீருமேடு தீயணைப்பு துறையினர், வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்த சேறு, சகதிகளை தண்ணீரை பீய்ச்சியடித்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.</p>
