தேனி: சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 கன அடியை எட்டியதால் வராக நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவு 126.28 கன அடி. நேற்று காலை நிலவரப்படி இந்த அணையில் நீரின் அளவு 118.42 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பகல் மற்றும் இரவில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

இதனால் 121 கன அடியில் இருந்த அணையின் நீர்வரத்து 539 கன அடியாக உயர்ந்தது. மேலும், அணையின் நீர்மட்டம் ஒரே இரவில் 8 அடி உயர்ந்து, அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டிய நிலையில், அணைக்கு வருகிற உபரி நீர் அப்படியே வெளியேறி வருகிறது.
இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு சிவகாசியில் ரூ. 7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை! உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!
சோத்துப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வருவதால், கல்லாறு, கும்பக்கரை ஆறு, செழும்பு ஆறு ஆகிய ஆறுகளில் நேற்று மாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், நடுப்பட்டி, சிந்துவம்பட்டி, குள்ளப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வராக நதி ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணி துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.