<p>திருப்பத்தூர்: ஆந்திர மாநிலம் பேத்தமங்கலம் ஏரி நிரம்பி பாலாறு நீரானது, திருப்பத்தூர் அடுத்த புல்லூர் தடுப்பணையை வந்தடைந்தது. இதனை அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.</p><p>வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழக - ஆந்திர எல்லைப் பகுதிகளான கோலார் மாவட்டம் பேத்தமங்கலம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பாலாறு பிறப்பிடமான நந்திதுர்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.</p><p>இதனால், பேத்தமங்கலம் ஏரி நிரம்பி, ஆந்திர மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள 23 தடுப்பணைகளையும் கடந்து பாலாறு நீரானது, தற்போது திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த புல்லூர் தடுப்பணையை வந்தது. இதனை அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிப்பட்டனர். தொடர்ந்து, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பாலாறு கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.</p><p>மேலும், இந்த பாலாறு நீர், தமிழகத்தில் 222 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வயலூர் முகத்துவாரத்தை அடைந்து கடலில் கலக்கும். இதனால், தமிழகத்தில் 32 ஆயிரத்து 746 ஹெக்டர் விவசாய நிலங்கள் பயனடைவது குறிப்பிடத்தக்கது.</p>
