<p>சென்னை: கன மழையால் பாதிக்கப்பட்ட 1,46,950 பேருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் இன்று உணவு வழங்கப்பட்டது. </p><p>தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16 ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை கடந்து செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், தமிழகத்தில் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை மறுநாள் (அக்.24) கடலூர், செங்கல்ப்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு தயாரித்து வழங்கப்பட்டது. மாநகராட்சியின் சமையல் கூடத்தில் உணவு தயாரிக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.</p>
