<p>காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இதனால், தொடர்ந்து இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவை நிரம்பி வழிகின்றன. </p><p>பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 380 ஏரிகளில் 15 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி உபநீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் கனமழையில் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் தடுப்பணை முழுவதும் நிரம்பி 9471 கனஅடி நீர் வெளியேறி செல்கிறது. அதை போலவே வெங்கச்சேரி பகுதியில் செய்யாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையும் முழுவதுமாக நிரம்பி உபரியாக 8,796 கனஅடி நீர் வெளியேறி சென்று வருகிறது.</p><p>பாலாற்றிலும் செய்யாற்றிலும் சொல்லும் உபரி நீரை கால்வாய்கள் மூலம் பல்வேறு ஏரிகளை நிரப்புவதற்கான பணிகளையும் நீர்வள ஆதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு தடுப்பணைகள் நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என சுற்று வட்டார கிராமப்புற விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.</p><p>மேலும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் பெய்த கனமழையின் காரணமாக 17 ஆயிரம் கன அடி நீர் வெளியேறுவதால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனுமன் தண்டலம், சிலாம்பாக்கம் மற்றும் வெங்கச்சேரி தடுப்பணைகளில் 10 ஆயிரம் கன அடி நீர் தற்போது செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
