<p>விழுப்புரம்: மலட்டாற்று தரைபாலத்தில் வெள்ள நீர் வழிந்தோடுவதால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆபத்தான வகையில் கடந்து செல்கின்றனர்.</p><p>திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>தென்பெண்ணை ஆற்றின் முக்கிய கிளை ஆறான மலட்டாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிறுவந்தாடு அருகே மலட்டாற்று தரைப்பாலத்தில் வெள்ள நீர் வழிந்தோடுவதால் பொதுமக்கள் ஆபத்தான வகையில் கடந்து செல்கின்றனர். வளவனுார் அடுத்த பரசுரெட்டிப்பாளையம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள மாணவர்கள்,பொதுமக்ககள், விவசாயிகள் தங்கள் பணிகளுக்கு செல்ல மலட்டாற்றின் தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர்.</p><p>தற்போது, தரைப்பாலத்தில் 3 அடி உயரத்தில் வெள்ள நீர் வழிந்தோடுவதால், அந்த வழியாக பொதுமக்களும், மாணவர்களும் ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர். அருகே உள்ள மற்றொரு பிரதான சாலை பாலத்தின் வழியாக சுற்றிச் செல்வதற்கு 4 கி.மீ.தொலைவு என்பதால், சுற்றி வருவதை தவிர்த்து, ஆபத்தான நிலையில் இருக்கும் தரைப்பாலத்தை மக்கள் கடந்து செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் மாற்று ஏற்பாடு செய்யவும், தரை பாலத்தில் தற்காலிக தடை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. </p>
