<p>தேனி: தேனி எலி வால் அருவி பெரியகுளத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த அருவியை தலையாறு அருவி என்று அழைப்பர். 975 அடி உயரம் கொண்ட இந்த அருவி தமிழகத்தில் மிக உயரமான அருவியாகும். இந்திய அளவில் 6-வது உயரமான அருவியாகும். எப்போதும் சுற்றுலா பயணிகளுடன் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் இந்த அருவி கடந்த சில மாதங்களாக மழைபொழிவின்றி நீர்வரத்து குறைந்திருந்தது. </p><p>இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் தேனி மேற்கு தொடர்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துள்ளது. அதிலும், எலிவால் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அதன் காரணமாக அருவிக்கு நீர் வரத்து துவங்கி அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.</p><p>கடந்த சில மாதங்களாக நீரின்றி காய்ந்து காணப்பட்ட எலிவால் அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அதனை கண்டு ரசித்து வருகின்றனர்.</p>
