<p>திருநெல்வேலி: பேட்டை பகுதி அருகே சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவனை 5-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து ஆக்ரோஷமாக துரத்திய வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p>நெல்லை மாநகராட்சி பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் மற்றும் மாடுகள் போன்றவை சுற்றித் திரிவது வாடிக்கையாக உள்ளது. இந்த தெரு நாய்கள் சாலையில் செல்லும் பள்ளி மாணவர்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>இந்த நிலையில், நெல்லை பேட்டை எம்.ஜி.பி ஒன்றாவது வடக்கு பகுதி சாலையில் நடந்துச் சென்ற பள்ளி மாணவனை, அங்கு நின்றுக் கொண்டிருந்த 5-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஆக்ரோஷமாக துரத்தின. இதனால், அச்சமடைந்த மாணவர் தனது புத்தகப் பையை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் அங்கிருந்த நாயை விரட்டினர். இதன் பின்னர் மாணவர் கீழே போட்ட புத்தகப்பையை எடுத்துச் சென்றார்.</p><p>இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பாதிவாகியது. இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து, மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
