<p>சேலம்: மேம்பாலத்தில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் நடந்து சென்று கொண்டிருந்தவரை தாக்கி, அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மாமாங்கம் மேம்பாலம் உள்ளது. தினந்தோறும் இந்த பாலம் வழியாக 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் மூன்று நபர்கள் திடீரென தனியாக நடந்து சென்று கொண்டிருந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து, இளைஞரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.2,000 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.</p><p>இதில் தாக்குதலுக்குள்ளான நபர் படுகாயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்ட நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
