<p>கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே நேர்த்திக்கடன் செலுத்த வளர்த்து வந்த ஆட்டுக் கிடாவைச் சிறுத்தை கடித்துக் கொன்றது. </p><p>பொள்ளாச்சியை அடுத்து குப்புச்சிபுதூர், பாறைப்பட்டி உள்ளிட்ட 4-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. அப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதில் குப்புச்சிபுதூர் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி சத்தியமூர்த்தி. இவர் 5-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். அதில் நேர்த்திக்கடனுக்காக ஒரு கிடாவையும் வளர்த்து வந்தார்.</p><p>இந்நிலையில் நேற்று இரவு அவரது விவசாய நிலத்துக்குள் புகுந்த சிறுத்தை, ஆட்டுக் கொட்டகையில் இருந்த கிடாவை கடித்து கொன்றுள்ளது. அதனைப் பார்த்த விவசாயி அதிர்ச்சியடைந்த நிலையில் உடனடியாக வனத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். வனத்துறை சம்பவ இடத்துக்கு வந்து சிறுத்தையை பிடிக்க அந்த பகுதியில் இரண்டு கூண்டுகள் அமைத்தனர். </p><p>இது குறித்து பேசிய கிராம மக்கள், “சிறுத்தை நடமாட்டத்தால் அதிகாலையில் பால் கறக்க தோட்டத்துக்கு செல்வது முதல் பள்ளிக்கு செல்வது வரை வெளியே செல்லவே பயமாக உள்ளது. வனத்துறை விரைந்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்று விட வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். </p>
