<p>ஈரோடு: பவானிசாகர் பகுதியில் காட்டுப்பன்றி ஒரே நாளில் ஐந்து பேரை தாக்கியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். </p><p>ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நகர் பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த கூட்டத்தில் உள்ள ஒரு காட்டுப்பன்றி கடந்த சில நாட்களாக அப்பகுதியில் ஆக்ரோஷமாக சுற்றித் திரிகிறது. இந்நிலையில் நேற்று பேருந்து நிலையம் அருகே மார்க்கெட் சதுக்கம் பகுதியில் நடமாடிய காட்டுப் பன்றி அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வரும் தேவகி என்ற பெண்ணை தாக்கியதில் அவர் கீழே விழுந்து, காயமடைந்தார். பெண்ணை காட்டுப்பன்றி தாக்கும் சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>இதேபோல் குடில் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கந்தன் என்பவர், சாலையில் நடந்து செல்லும் போது காட்டுப்பன்றி தாக்கி காயம் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று ஒரே நாளில் பவானிசாகர் நகர் பகுதியில் காட்டுப்பன்றி ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை தாக்கியதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மனிதர்களை தாக்கும் காட்டு பன்றியை வனத் துறையினர் உடனடியாக பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>பவானிசாகர் வனத்தில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள், திருமண மண்படங்களில் வீசியெறியும் எச்சிலைகளை தின்று பழகவிட்டதால் தற்போது கிராமத்திற்குள் படையெடுக்கின்றன. ஆகவே காட்டில் வாழும் விலங்குகளுக்கு மசாலா கலந்த உணவுகள் தர வேண்டாம் என வனத் துறை எச்சரித்துள்ளது.</p>
