<p>சென்னை: கட்டட கழிவுகளுடன் சென்ற டிரக் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.</p><p>ஆர்.ஏ.புரத்தில் இருந்து டிரக் ஒன்று கட்டட கழிவுகளை ஏற்றிக் கொண்டு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனங்கள் சாலையை கடக்க முயன்றதை கண்ட டிரக் ஓட்டுநர் வேகத்தை குறைக்க முயன்றுள்ளார். அப்போது பாரம் அதிகமாக ஏற்றப்பட்டிருந்ததால் டிரக் கட்டுப்பாட்டை இழந்ததை உணர்ந்த டிரக் ஓட்டுநர், சாலை ஓரமாக நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக சாலையின் ஓரம் நின்றிருந்த ஆட்டோ ரிக்ஷாவின் மீது டிரக் பயங்கரமாக மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இந்த விபத்தில் ஆட்டோ ரிக்ஷா முற்றிலும் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. மேலும், அருகில் நின்று கொண்டிருந்த ஒரு காரின் பின்புறமும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, விபத்து ஏற்பட்ட நேரத்தில் ஆட்டோவில் ஓட்டுநர் இல்லாததால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து நீலங்கரை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
