மயிலாடுதுறை: தனியார் பள்ளி பேருந்தை வழிமறித்து போதையில் இளைஞர்கள் தகாராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகத்துக்கு உட்பட்ட சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடி கிராமத்தில் பள்ளி பேருந்து ஒன்று மாணவர்களை இறக்கி விடுவதற்காக சென்றது. அப்போது அந்த பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் மூவர் நிற்கவே நிதானம் இல்லாமல் உச்சகட்ட மதுபோதையில் இருந்த அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பேருந்தின் கண்ணாடியில் கல் வீசி தாக்கியுள்ளனர். கைகளால் கண்ணாடியை அடித்தும், பேருந்தின் வைபர்களை உடைத்து மிரட்டியுள்ளனர். இதனால் பேருந்தின் உள்ளே அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள் பயந்து போய் அலறினர். சிறிது நேரம் தகராறில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் பின்னர் தாங்களாகவே அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தினர் பொறையார் காவல் நியைத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், இது போன்று குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், எடுத்துக்காட்டு கிராமத்தைச் சேர்ந்த தாமரைசெல்வன் என்ற 23 வயது இளைஞரை பொறையார் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.