<p>தூத்துக்குடி: டெல்லி கார் குண்டுவெடிப்பு எதிரொலியாக, திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆன்மீக தலமாக மட்டுமில்லாமல், சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இதனால், திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவது வழக்கம்.</p><p>இந்நிலையில், நேற்று (நவ.10) தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. அந்தவகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் திருச்செந்தூர் கடற்கரை, தரிசன வரிசை உள்ளிட்ட பல இடங்களில் தீவிர சோதனை செய்தனர்.</p><p>மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு, பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கத்தை விடக் கூடுதலாக 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் குலசை முத்தாரம்மன் கோயில், ராக்கெட் ஏவுதளம், உடன்குடி அனல்மின் நிலையம் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
