<p>சென்னை: ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.</p><p>சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) நீலாங்கரை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் காவல்துறை தலைமையகத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. </p><p>உடனே இந்த தகவல் நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தெரியபடுத்தப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டது. தகவலின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் நடிகர் அஜித் வீட்டில் 3:15 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். 45 நிமிட சோதனைக்கு பிறகு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர். </p><p>முன்னதாக, சில நாட்களாகவே சென்னையில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக முதலமைச்சர், முன்னணி நடிகர்களின் வீடுகள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என பல்வேறு இடங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்வதில் அந்த தகவல் புரளி எனவும் தெரியப்பட்டு வருகிறது. </p>
