தஞ்சாவூர்: முதியோருக்கான தடகள போட்டியில் 74 வயது ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் முதலிடம் பிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை திலகவதி (74). இவர் பல்வேறு தடகள போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதனிடையே, சென்னையில் நடைபெற்ற முதியோருக்கான தடகள போட்டியில் முதல் இடத்தையும், நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடத்தையும் பிடித்து முதுமையிலும் சாதனை செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு மதுரையில் மூத்தோர்களுக்கு மாநில அளவிலான சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி நடைபெற்றது. அதிலும் இவர் 110 மீட்டர் தடை தாண்டி ஓடுதல் போட்டியில் தங்கப்பதக்கமும், 800 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றார்.

இது பற்றி ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் திலகவதி கூறுகையில், "தனக்கு வயதான நிலையில் குடும்பத்தினர் விளையாட்டுகளில் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை, இருந்தாலும் விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தினால் வேடிக்கை பார்க்க போவதாக கூறி சென்று போட்டியில் கலந்து கொள்வேன்" என்றார்.